மூன்று மணி நேரம் கடந்த நிகழ்ச்சி, அரங்கமே வயது வேறுபாடின்றி ஆர்ப்பரித்துக் கொண்டாடும் காட்சி.
இதெல்லாம் தென்னிந்திய நட்சத்திரங்களைக் கண் கொண்டு பார்த்த அனுபவங்கள்.
ஆனால் ஈழ மண்ணின் இளவல்கள், எந்தவிதமான வர்த்தக அடையாளமும் இன்றி, இன்று சமூக வலைத்தளத்தையே தம் கருவியாகக் கொண்டு ஒட்டுமொத்த உலகத் தமிழரையே மயக்கி வைத்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியம் பறைந்தது, ஐரோப்பிய மண்ணினைத் தொடர்ந்து ஆஸியில் மெல்பர்ன், அடலெய்ட், பேர்த் தொடர்ந்து சிட்னி என்று நான்கு நகரங்களில் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய இன்னிசைத் துள்ளல்.
இப்படிய ஒரு சேர ஆஸி நகரங்களில் நம்மவர் நிகழ்த்திக் காட்டுவதும் கூடப் புது வரலாறு.
சொல்லிசையைக் கையில் எடுத்துக் கொண்டு, உள்ளார்த்தம் பேசும் வரிகளைப் பார்வையாளர்களிடமேயே ஊகிக்க வைத்துத் தமிழர் மொழி, இனம் மீதான காதலைக் கடத்துவது என்பது புதியதொரு உத்தி. அதை வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் என்பதைச் சான்று பகிர்ந்தது, அவையோர் அந்த மொழி ஊடாடல்களினூடே நமக்காக உயிர்ப்பூச் சொரிந்த அந்தத் தேசப் புதல்வர்களை நினைத்து ஆர்ப்பரித்த போது.
வாகீசன் ராசையா, திஷோன் விஜயமோகன், அட்விக் உதயகுமார் மூவருமே முப்பரிமாணங்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆனால் கூட்டாக இணைந்தாலே ஒரு மாயாஜாலத்தை மேடையில் நிகழ்த்த வல்லவர்கள் என்று காட்டியது அவர்கள் சுரந்த பாடலும், ஆடலும்.
இப்படியான நிகழ்ச்சிகளில் தம்முடைய கச்சேரியையும் பாருங்கள் என்று கூப்பாடு போடும் ரசிகப் பெருமக்களும் இருப்பார்கள். சில சமயம் மேடையை மேவி அவர்கள் அந்த நிகழ்ச்சியைச் சின்னாபின்னப்படுத்தி விடுவார்கள். ஆனால் இங்கே நடந்ததோ வேறு. சபையோரை அடக்கி ஆண்டார் வாகீசன். அவர்களோடு பேச்சுக் கொடுத்து நான் உங்கட பெடியன் என்ற உரிமையோடு அந்நியம் களைந்து அன்னியோன்யம் ஆக்கினார்.
அனுபவப்பட்ட பாடகர், இசைக் கலைஞர்களுக்கே இம்மாதிரியான சூழல் கைவரப் பெறுவது கடினம். ஆனால் இந்த இளம் வயதில் மதி நுட்பமாகப் பேசிக் கட்டுக்குள் கொண்டு வந்தது சபாஷ் போட வைத்தது.
தேவைப்படும் போது வந்து ஆடிச் சிறப்பித்த நடன மாந்தர், பொருத்தமான ஒளிக் கலவை, முரண்டு பிடிக்காத ஒலியமைப்பு என்று எல்லாமே கச்சிதமாக இயங்கியது.
அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று அறுத்து தள்ளாமல், இடையிடையே ஒரு இசைக்கலைஞருக்குச் சுய ஒழுக்கமும், முறையான கல்விப் பின்னணியும் கட்டமைப்பதன் அவசியத்தையும் கோடிட்டுக் காட்டினார்.
பள்ளிக்கூடக் காதல், ஊர் சுற்றும் பொப்பிசை, வீரம் விளைந்த மண்ணின் பரணி என்று பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாக மாறி மாறி எழுந்து கட்டிப் போட்டன.
இரண்டாவது சுற்றும் வேண்டும் என்று உரிமையோடு கேட்ட ரசிகர்களுக்கு தமிழரின் உரிமை கீதமும், கனகா பாட்டும் வந்தது.
ஆஸி நகரங்களில் எங்கட பெடியளைக் கொண்டாட வைத்ததன் பின்னணியில் உழைத்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் புத்துணர்வோடு பூச்சொண்டு.
எல்லாவற்றையும் ஒரு பக்கம் வைத்து விடுங்கள்.
தமிழ்ச் சுவடே அதிகம் படாத புலம் பெயர் தேசத்துக் குழந்தைகளையும் கிளர்ந்து ஆடிப் பாட வைத்து கூட நின்று பார்க்க வேண்டும் என்ற ஆசையை எழுப்பும் மந்திரத்தை இவர்கள் எங்கே கற்றார்கள்?
எங்கட பெடியளைப் பார்க்க ஆர் வருவினம் என்ற ஊகங்களைத் தவிடு பொடியாக்கி விட்டார்கள் எங்கட பெடியள் ❤️❤️❤️
கானா பிரபா
30.03.2025