

இப்படியாக இன்னொரு நம்மவர் படம் தானே என்ற ஒரு தயார்படுத்தலோடு தான் 1999 படத்துக்கும் போனேன். வெண் திரை அகலக்கால் பதிக்கப் படம் ஆரம்பமாகின்றது. எடுத்த எடுப்பிலேயே இரவு நேரத்துக் கனேடிய நகரப் பெருந்தெருக்கள் வழியே காமெரா துரத்தக் கூடவே மேற்கத்தேயப் பின்னணி இசையும் பயணிக்க முகப்பு எழுத்தோட்டம் வருகின்றது. ஆகா, ஆரம்பமே கைதேர்ந்த தொழில்நுட்ப உத்தியோடு எடுக்கப்படுகிறதே என்ற உசார் மெல்ல வந்து ஒட்டிக் கொள்ள அவநம்பிக்கை மெல்லக் கழன்று கொள்கின்றது.
படத்தின் முதற்காட்சியில் வரும் கொலையை மையப்படுத்தி நகர்கின்றது தொடர்ந்து வரும் காட்சிகள். அந்த விறுவிறுப்பும், பார்வையாளனைக் கட்டிப் போடும் கதை நேர்த்தியும் படம் முடியும் வரை நிறைந்து நிற்கின்றது. அதுதான் 1999 படத்தின் பலம்.

கே.எஸ்.பாலசந்திரன் போன்ற மூத்த கலைஞர்களோடு இளைஞர்கள் பலரை முக்கிய பாத்திரங்களை ஏற்க வைத்து இயக்கியிருக்கிறார் லெனின் எம்.சிவம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வேண்டாத இடங்களில் கதையைத் திருப்பாமல் சொல்ல வந்த விஷயத்தைச் சுற்றியே கதைக்களத்தை அமைத்திருக்கின்றார். அந்த வகையில் கதை, திரைக்கதை ஆகியவை இரண்டுமே இப்படத்துக்குப் பெரிய பலமாக அமைந்திருக்கின்றது. 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடக்கும் கதை, அதே காலகட்டத்தில் நானும் புலம்பெயர்ந்த சூழலில் வாழ்ந்த போது நடந்த விஷயங்களை மீண்டும் இரைமீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமாகப் பல காட்சியமைப்புக்கள் இருக்கின்றன. புலம்பெயர் சூழலில் அவதானிக்கும் விடயங்களை வைத்து வசனங்களை அமைத்திருப்பதும் அவற்றை ஈழத்தமிழ் பேசும் பாங்கில் சமரசமில்லாது வைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு, கூடவே அவற்றை நேர்த்தியாக வெளிப்படுத்தும் நடிகர்களும் சபாஷ் போட வைக்கிறார்கள். அந்தந்தப் பாத்திரங்கள் எப்படி எப்படியெல்லாம் தம் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதை மிகையில்லாமல் காட்சி அமைப்பிலும், வசன அமைப்பிலும் அடக்கியிருக்கிறார் இயக்குனர். இப்படத்தினைத் தந்ததன் மூலம் புலம்பெயர் வாழ்வியலின் விரிந்த தளங்களை இம்மாதிரி முயற்சிகள் மூலம் எதிர்காலத்தில் தரவிருப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றார்.

இந்தப் படத்தை உலகத்தரத்துக்கு நகர்த்திச் செல்வதில் முதலில் நிற்பது படத்தொகுப்புத் தான்.
ராஜ்குமார் தில்லையம்பலம் பாடல்களுக்கு இசையமைத்துப், பின்னணி இசை வழங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் எழுத்தோட்டத்தின் பின்னணி இசைக் கோர்ப்பாகட்டும், இளைஞர் குழு எடுக்கும் பரபரப்பான முடிவுகளின் காட்சி அமைப்புக்களின் பின்னால் ஒலிக்கும் இசையாகட்டும் மிகவும் சிறப்பாக, சினிமாவுக்கேற்ற இசை நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பா, மகன் உரையாடல் காட்சிகள் போன்ற உணர்ச்சிபூர்வமான காட்சிகளின் பின்னால் அடக்கி வாசிக்கும் புல்லாங்குழல் ரக இசை மிகவும் அன்னியப்பட்டு தொலைக்காட்சித் தொடருக்குப் போவது போலப் பயமுறுத்துகிறது. இப்படியான காட்சிகளுக்கு இன்னும் வேறொரு பரிமாணத்தில் வித்தியாசமான இசைக்கலவையைப் பயன்படுத்தியிருக்கலாம். படத்திற்காக மொத்தம் ஆறு பாடல்கள் ஒரு தீம் இசை, எடுக்கப்பட்டாலும் இரு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட்டிருக்கின்றன. எஸ்பி.பாலசுப்ரமணியம், கார்த்திக் குரல்களில் கேட்ட பாடல்களைப் படத்தில் பார்க்கும் போது இன்னும் இனிமை.
படத்தின் ஒளிப்பதிவைப் பொறுத்தவரை இரவு நேரக் காட்சிகள், பாடற் காட்சிகள் போன்றவற்றில் இருந்த நேர்த்தியான கமெரக் கோணங்கள், ஒளியமைப்பு போன்றவை மற்றைய காட்சிகள் சிலதில் பொலிவிழந்து, ஒளி பெருகி சீரியலுக்குப் போவோமா என்று அடம்பிடிப்பது போல அமைந்ததைத் தவிர்த்திருக்கலாம். நுணுக்கமாகப் பார்த்தால் சில இடங்களில் கமெரா மெல்ல ஆட்டம் கண்டிருக்கிறது. அத்தோடு குளோசப்பில் முகங்களைக் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இந்த நுணுக்கமான குறைளைத் தவிர்த்தால் தொழில்நுட்ப ரீதியில் இன்னும் மேம்பட்ட படைப்பாக இது அமைந்திருக்குக்கும்.
அட, நம்மவர் படத்தில் பாடற்காட்சியை சிரிக்க வைக்காமல் சிறக்க எடுத்திருக்கிறார்களே என நினைக்கத் தோன்றுகிறது.

"வன்னியில் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையை விடுதலைப்புலிகள் ஆரம்பித்திருக்கிறார்கள், ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றன" படத்தின் முடிவில் வானொலி ஒன்றின் குரல் மேலெழுகிறது. மனம் பெருங்குரலெடுத்து அழுகிறது, என்னைப் போலவே பலரும் அதை உணர்ந்திருப்பார்கள்.
படம் முடிந்ததும் அரங்கம் கைதட்டிப் பாராட்டுகிறது.
புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் அன்பு என்னும் திசை மாறிய இளைஞனின் போக்கில் கதையை அமைத்து அதனூடே சொல்லும் நிஜங்கள் சுடுகின்றன. ஊரை இழந்து, உறவை இழந்து புலம்பெயர்ந்து போன நாம் அங்கே நிம்மதியான வாழ்வை எதிர்கொண்டோமா, நம் இனம் சபிக்கப்பட்ட இனமா என்ற ஆதங்கம் மனதில் பாரமாக ஒட்டிக்கொள்கின்றது. அதுவே "1999" படத்தின் உருவாக்கத்துக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.
16 comments:
நல்ல விமர்சனம் தல...
நல்ல விமர்சனம்
இந்தத் திரைப்படம் கனடாவில் வெளியானபோது எம் தமிழ் மக்கள் தந்த வரவேற்பைப் பார்த்து இந்தப் படக் குழுவினர் மிரண்டே போய்விட்டனர்... கடைசியில் பத்திரிகைகளில் “இன்னும் ஒரு வாரம் மட்டுமே திரையரங்கில் படத்தைத் திரையிட இருப்பதால் தயவுசெய்து திரையரங்கிற்கு மக்கலை வரும்படி வேண்டுகோள் கூடவைத்த்னர்...
A Humble reminder to tamil canadians என்றூ தொடங்கும் அந்த வேண்டுகோளில், "we are disappointed that even after selected for an international film festival, the movie is struggling to get viewership from tamil canadians..."
எம்மவர்களிடம் நல்ல திரமை இருந்தும் சரியான படைப்புகள் வராததற்கு காரணம் கூட இவர்கள் தான்.. வெறும் குருவி, ஏகன், வில்லு, கந்தசாமி மற்றும் இன்னொரன்ன குப்பைகளைப் பார்த்துவிட்டு, படம் உதவாது என்று பொச்சடிப்பவர்கள் அதை நிறுத்திவிட்டு தயவுசெய்த இது போன்ற திரைப்படங்களைப் பார்க்கலாம்
தமிழ் நாட்டில் இந்த மாதிரி படங்களை பார்க்க முடியாது ஏதாவது லிங் இருந்த கொடுங்களேன்...
தல கோபி, யூபி
மிக்க நன்றி உங்கள் வருகைக்கு
வணக்கம் அருண்மொழிவர்மன்
எம்மவரிடையே இருக்கும் பெரும் சிக்கல் இதுதான். மூச்சுக்கு முன்னூறு தரம் எங்கள் படைப்புக்கள் வரவேணும் ஆதரவு கொடுக்கோணும் என்பார்கள். ஆனால் இப்படியான முயற்சிகள் வரும் போது நொண்டிச் சாக்குகளைக் கைவசம் வைத்திருப்பார்கள்.
வணக்கம் அத்திரி
இந்தப் படம் இன்னும் திரையிடப்படுவதால் இணைய இணைப்புக்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
நானும் இப்படத்தை திரையரங்கில் சிட்னியில் பார்த்தேன். சாதாரண ஈழத்துப் படம் என்றே நினைத்தாலும், எம்மவரின் படத்தை நாம் தான் ஆதரிக்க வேணும் என்ற நோக்கத்திற்காகவே திரையரங்குக்கு சென்றேன். ஆனால் படம் தொடங்கி முடியும்வரை விறுவிறுப்பாக எல்லோரையும் கவர்ந்த சிறந்த படமாக இப்படம் இருந்தது. நான் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று 1999.
//"வன்னியில் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையை விடுதலைப்புலிகள் ஆரம்பித்திருக்கிறார்கள், ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றன" படத்தின் முடிவில் வானொலி ஒன்றின் குரல் மேலெழுகிறது. மனம் பெருங்குரலெடுத்து அழுகிறது,//
:(((
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கந்தப்பு, ஆயில்யன்
உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது. நான் கூட உங்களை மாதிரி 'க்ளோஸ் அப்' பதிவுகளை ஃப்ரேமில் தவிர்த்திருந்தால் அவசியத்திற்க்கு அப்பாற்பட்டு நன்றாக இருக்கும் என்றுதான் சொல்ல நினைத்தேன். மேலும் இந்த மாதிரி நிகழ்வுகளை அதாவது ஒரு நிகழ்ச்சியின் புள்ளியில் பலரின் பார்வைஇணைப்பை ஒரு ப்ரேஸில் படத்தில் பார்த்தேன். இப்பதான் எஸ்பிஎஸ் இல் பார்த்தேன். அதே மாதிரி படத்தை உல்டா பண்ணி தமிழில் மாதவன் நடித்திருந்தார். பேர் மறந்து போய் விட்டது. இப்பொழுது இந்தப் படத்தில் சிவம் மிக நன்றாக அதே நேரத்தில் அதே தெரியாத அளவிற்க்கு எடுத்துள்ளார். அப்படியிருந்தும் அது புரியாமல் ஏன் திரும்பி அதே இடத்தைக் காட்டுகிறார்கள் என்று எனது பக்கத்து சீட்டு கேட்டுது. போகட்டும்.நீங்கள் சிட்னி தமிழ் மன்றத்தைப் பாராட்டியதற்க்கு மிக்க நன்றி. உங்கள் கருத்தை எங்கள் வழியில் சொல்வதானால்' தமிழ்நாட்டுக்கு எல்லைகள் இருக்கலாம்..ஆனால் தமிழர்களுக்குள் இல்லை எல்லை' என்பதாகத்தான் ஒரு தமிழனின் சிறப்புச் செயலை உலகத்தின் இப்பகுதிக்கு காட்டுதல் எம் கடமையென்று செய்தோம். இழிந்த நூறு படம் வெளியிட்டு காசு பார்ப்பதை விட இந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தை, ஈழப் படத்தினை வெளியிட்டு இருப்பதில் பெருமையடைகிறோம். அது மட்டுமல்ல.. கனடா மாதிரியே நல்ல படத்தைக்கோட்டை விட்டீர்கள் என்று பலர் சொல்லி மீண்டும் காட்சிகள் இருக்கிறதா என்று கேட்டவர் பலபேர். இதற்க்கான முழுப்பொறுப்பும் புகழும் தமிழ் மன்றத்தலைவர் ஜான் நிவேன் அவர்களையே சாரும். கருத்தளிக்க வாய்பபளித்தமைக்கு மிக்க நன்றி.
பாலு.
வணக்கம் அன்பின் பாலு
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். நீங்கள் குறிப்பிட்ட அந்த மணிரத்னம் படம் பெயர் "ஆயுத எழுத்து" ஆனால் அதில் சங்கிலிக் காட்சிகளை வலியக் கொழுவியது போல இருக்கும்.
தமிழால் ஒன்றிணைவோம், எல்லைகளைக் களைவோம், ஜான் அவர்களுக்கும் இதே வேளை இந்த முயற்சியைச் சாத்தியப்படுத்தியமைக்கு நன்றிகள்.
லங்காவில் இது திரைக்கு வருமா
நல்லா விமர்சனம் பண்ணியிருக்கிரிங்க
வாங்கோ சங்கர்
லங்காவில் இந்தப் படம் வெளியிடத் தடையாக எந்த வித காரணிகளும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களும் கவனிக்க வேண்டுகிறேன்.
அன்பு நண்பர் பிரபா,
உன்னதம் பிப்ரவரி இதழில் கிழக்கு திமோர் நாட்டைப் பற்றிய தங்களின் தமிழாக்க கட்டுரை படித்தேன். இயல்பான எழுத்து நடையில் உங்களுடைய மொழியாக்கம் நன்றாக இருந்தது.
அன்பின் தாவுத் அவர்களுக்கு
என் கட்டுரை உன்னதம் இதழில் வந்ததை உங்கள் மூலம் தான் அறிந்து கொண்டேன். வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி
1999 திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்
http://www.youtube.com/watch?v=Sn8s0mYUlIU
Post a Comment