அசுர உழைப்பு என்பார்களே?
அதை நேரில் பார்க்கும் போது அணு அணுவாக உணரக் கூட அளவுக்கு மேடையில் அந்த அலைவரிசையைப் பார்வையாளருக்குக் கடத்திய உணர்வு மேலிட்டது.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் சிட்னியில் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நிகழ்த்திய அரங்கு
பிரமிப்பும், பெருமிதமும், பூரிப்பும் நிகழ்ந்த அனுபவமாக அமைந்து விட்டது.
கட்டியம் கூறி சிலப்பதிகாரம் தொடங்கிய போது முன்னோட்டமாக அந்தச் சிறுமிகள் ஆடலும், பாடலுமாகக் கொடுத்த நேர்த்தியில் கண் கலங்கிப் பூத்து விட்டது.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவியும், ஆசிரியருமான பெருமை மிகு ஈழத்துப் படைப்பாளி கோகிலா மகேந்திரன் அவர்களின் புதல்வர் முனைவர் பிரவீணன் மகேந்திரன் அவர்களது கச்சிதமான அறிமுகத்தோடு தொடங்கிய மகாஜன மாலை 2025 நிகழ்வில் இரண்டு அரங்கச் சுவை அம்சங்கள் அமைந்திருந்தன.
தொடக்கத்தில் “சிட்னி அரங்கக் கலைகள் சக இலக்கியப் பவர்” வழங்கிய “மாலை” என்ற குறு நாடகம்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பின் இந்த அமைப்பு ஃபீனிக்ஸ் போல உயிர்த்தெழுந்திருக்கிறது.
இவர்களின் நாடகங்களை முன்னாளில் அனுபவித்தவர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பாக இருக்க அதற்குச் சரியான “மாலை” போட்டது.
குறியீட்டுப் பாணியிலே அந்த நாடகத்தின் கதைப் போக்கைப் பார்த்தால், சாதியத்தை நோக்கியதா? இல்லை இனவாதத்தை நோக்கியதா இல்லையில்லை அதிகாரத்தின் முகத்தைக் காட்டும் வர்க்க வேறுபாட்டைக் கொணர்ந்திருக்கிறதா என்று பல கேள்விகளைக் காட்டும்.
இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ஶ்ரீபாலனுக்கு இரட்டை வேடம், ஆமாம் இன்று “மாலை”யில் நடிகர், பின்னர் சிலப்பதிகாரம் அரங்கியலில் பின்னணிப் பாடகர் என்று.
மாலை நாடகத்தில் சிறப்புச் சப்தங்களுக்கும், இன்றைய தொழில் நுட்ப வாகனத்தில் ஏறி மாறும் பின்னணிக் காட்சிகள் என்று சுவாரஸ்யம் கூட்ட, அந்த அம்மன் சிலைக்குப் பதில் கேள்விக்குறி வடிவில் சிலை வடிவமைத்தது கூட ஆச்சரியம் கலந்த நுண்ணரசியல் தான். அதன் பின்னணியில் வடிவமைப்பாளர் திரு.குணசிங்கம் சிவசாமியின் கைவண்ணம் இருந்திருக்கலாம்.
இந்த அளிக்கையில் கருணாகரன் நடராஜா, அழகரட்ணம் சந்திரகாசன், பாலசுந்தரம் ஶ்ரீபாலன் உள்ளிட்ட பழம்பெரும் (!) கலைஞர்களோடு ஞானாம்பாள் அசோகன், அம்பிகா அசோகபாலன், ஜனார்த்தனன் குமாரகுரு ஆகிய புதுவரவுகளும் இலக்கியப் பவரை மீளவும் ஒளிரச் செய்திருக்கிறார்கள்.
நாடகம் முடிந்த பின்னர் இடைவேளையின் போது ஆங்காங்கே பேச்சுக் கொடுத்த போது எல்லோரின் பேசுபொருளாக இந்த நாடகத்தில் அற்புதமாக நடித்த கலைஞர்களும், கதை பேசும் அரசியலும் றோலுடனும், வடையுடனும் சேர்த்து ருசிபார்க்கப்பட்டதை அனுபவரீதியாகக் கேட்டேன்.
மிக முக்கியாக, எந்த வித வசனமும் இல்லாமல் சைகையாலேயே நடித்த சந்திரஹாசனை அடையாளம் தெரியாமல் ஒருவர்
“அந்தக் குடை பிடித்தவர் நடிப்பு அபாரம்" என்றார். அவ்வளவு தூரம் இந்த நாடகத்தின் மீது பார்வையாளருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.
குறை என்று பார்த்தால், இந்த நாடகத்தின் மையக் காட்சியாக, சிலையின் முன்னால் நிகழும் முக்கியமான உரையாடல் போக்கின் பின்னணியில் கொடுத்த பக்தி இசை உறுத்தி மழுங்கடிக்கப் பார்த்தது. ஒரு அமானுஷ்யம் கலந்த மென்சோக இசையைப் பரவ விட்டிருக்கலாம்.
இலக்கியப் பவரை இன்னும் தொடரவும், அடுத்த தலைமுறையோடு பயணிக்கவும் “மாலை” மீண்டும் மாலை போட்டிருக்கிறது.
ஈழத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வெறும் கல்விமான்களை மட்டுமல்ல, தலை சிறந்த எழுத்தாளர்களை, கலைஞர்களை ஈன்றெடுத்திருக்கிறது. அதற்கும் மேலாகத் தொன்று தொட்டு அங்கு வளர்க்கப்பட்ட நாடகர்கள் வெளி உலகிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். அப்படியானதொரு ஆளுமை மாவை நித்தியானந்தன் அவர்கள்.
நாடகத்துறையில் 55 வருட காலம் அனுபவம் கொண்டவர் மாவை நித்தியானந்தன், அத்தோடு அவருடைய கல்விச் செயற்பாடுகள் அவுஸ்திரேலிய மண்ணில் பரந்து விரிந்தவை, 30 ஆண்டுகளுக்கு மேலாக பாரதி பள்ளியின் பன்முகச் செயற்பாடுகளில் நாடகமும் அரங்கியலும் இணைந்தவை.
ஐந்து ஆண்டுத் தேடலோடு ஒரு ஆற்றுகையை எழுதியவர், ஆறு மணி நேர ஆற்றுகையை இரண்டரை மணி நேரமாகச் சுருக்கிக் கொடுக்க வேண்டிய சவாலையும் மாவை நித்தியானந்தன் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய எழுத்து சக தயாரிப்பில் அமைந்த அந்தப் படைப்பை இயக்கியவர் நடன விற்பன்னர் பகீரதி பார்த்திபன்.
நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் திரட்டோடு அமைந்த சிலப்பதிகாரம் ஒரு பாரம்பரிய அரங்காற்றுகையில் பங்காற்றியவர்கள் மாவை நித்தியானந்தன் அவர்கள் 1994 இல் நிறுவி இன்று முப்பது ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கும் பாரதி பள்ளியின் நடப்பு மாணவர்களும், பழைய மாணவர்களும் தாம்.
என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் அவுஸ்திரேலியாவில் மாநில மட்டத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் முதல் கலாசாரப் பரிவர்த்தனை என்றும் சொல்லலாம். ஈழத்தில் நாம் வடக்குக் கிழக்கு மற்றும் தென் பிராந்தியங்களில் நாடக விழாக்களுக்குப் போய்க் களமாடிய நினைவுகள் கிளர்ந்து வருகிறது.
சிட்னியில் சிலப்பதிகார விழா ஆண்டு தோறும் நிகழ்த்தப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய நிகழ்வு. குடிமக்கள் காப்பியம் என்று போற்றப்படும் அந்தக் காப்பியத்தைத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஆண்டு தோறும் நிகழ்த்திக் காட்டுவதும் ஒரு சம்பிரதாயமாகி விட்டது.
மாவை நித்தியானந்தனின் “சிலப்பதிகாரம்" வழமைக்கு மாறானதொரு கோணத்தில் பரந்து விரிந்திருந்தது.
ஒவ்வொரு காட்சியிலும் வந்து காட்சிப்புலத்தை விபரிப்பதில் இருந்து, அந்தந்தக் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கும் நடன மாந்தரைப் பொறுத்தவரை அவர்கள்,
கோவலன், கண்ணகி, மாதவி, கவுந்தி அடிகள், பாண்டிய மன்னன் போன்ற முக்கிய பாத்திரங்களுக்கு நிகராக அல்லது இயங்க வேண்டியதொரு பான்மையில் இந்தப் படைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
காட்சியில் எல்லோருமே பாட வேண்டும், கூத்து மரபு சார்ந்த நடன வெளிப்பாட்டைக் காட்ட வேண்டும் என்ற பன்முகத்தன்மை கொண்ட இயக்கமாக அமைந்தது. பின்னணிப் பாடுவோருக்கும் ஓய்வில்லாமல் ஒவ்வோர் காட்சிகளின் தன்மை அறிந்து குறித்த பாத்திரங்களின் குரலாக மாறிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்கள்.
இந்த மாதிரியானதொரு முயற்சியை உள்ளது உள்ளபடி அப்படியே திரைப்படமாக எடுக்க நினைத்தால் கூட ஆறு மாதங்கள் பிடிக்கும் சிரமதசை கொண்ட நுணுக்கமானதொரு படைப்பு.
அதனால் தான் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் அந்த அசுரத்தனமான உழைப்பைக் கோடிட்டுக் காட்டினேன்.
காட்சிகள் மாறிக் கொண்டிருக்கும் போது இடைவெளியில்லாமல் எல்லோருமே தத்தமது காட்சி மாந்தர்களாகச் சீராகப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். காட்சிப் பின்புலத்தில் காவிரிப்பூம்பட்டினமும், மதுரையும், அரண்மனையும் என்று தேவையறிந்து மாறிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஒலி, ஒளித் தொழில் நுட்ப அணி அந்த வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தது.
இந்த அரங்காடலில் கையாண்ட குறும் பாடல்கள் மற்றும் உரையாடலில் கையாண்டவை கலப்படமற்ற தூய தமிழ் இலக்கிய நயம் கொண்டவை, அந்தத் தூய தமிழ் ஈராயிரக் குழவிகளின் வாயில் நேர்த்தியாகப் பயணித்தது, நாடகர் மாவை நித்தியானந்தனின் இன்னொரு வெற்றி எனலாம்.
ஒரு காவியப் படைப்புக்கு உண்டான எல்லாவற்றையும் கலந்து கொடுக்க வேண்டும் என்று காட்சியில் விளைவிக்கும் அழகியலையும், குரவை கூத்து போன்ற நாட்டாரியல் அம்சங்களையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்ற வேட்கையைப் படைப்பாளரும், அணி செய்தோரும் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதில் கொஞ்சம் செம்மைப்படுத்திக் குறைத்திருக்கலாம் என்ற எண்ணமும் வந்தது. அதாவது கொடுத்தது எல்லாமே சிறப்பு என்றாலும் மிதமிஞ்சிய தித்திப்பு நிலை.
ஆற்றுகை போய்க் கொண்டிருக்கும் போதே இவர்கள் கொடுத்த பிரமிப்பான அனுபவத்துக்கு எழுந்து நின்று கை தட்டிக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றியது,
இவ்வளவு பேரும் மீண்டும் அன்று மாலை மீண்டும் இதே அரங்காற்றலைக் கொடுக்கப் போகிறார்களே என்று நினைக்கும் போதே தலை சுற்றியது.
மகாஜன மாலை 2025 சிறப்பிதழில் “மகாஜனக் கல்லூரியின் நாடகப் பாரம்பரியம்” சில நினைவலைகள் என்ற பெறுமதியானதோர் ஆவணம் காணக் கிடைக்கின்றது. நூலகம் இணையத்தளத்தில் இதைச் சேர்த்து விடுங்கள். அத்தோடு பழைய நாடக, கலைவிழாப் படங்கள் இவற்றோடு “நாடகக் கலையால் காலத்தை அளந்த கனவான் அமரர் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம்” அவர்கள் குறித்த கட்டுரையும் கிடைக்கின்றது.
மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் அவுஸ்திரேலியா இரண்டு செய்திகளைச் சொல்லி வைத்திருக்கிறது.
ஒன்று,
என்ன வளம் இல்லை இந்த ஆஸி தேசத்தில் என்று நம் பக்கத்து மாநிலத்தை அழைத்து வந்து காட்டியிருக்கிறார்கள்.
இப்பேர்ப்பட்ட பிரமாண்ட நிகழ்வை நினைத்தாலே களைப்பு வந்து விடும். ஒன்றல்ல இரண்டு நிகழ்வுகளை ஒரே நாளில் அரை மணி நேர இடைவேளையில் நாலரை நாலரை மணி நேரங்களாக நிகழ்த்திக் காட்டிய உழைப்பை வந்திருந்த சக சிட்னித் தமிழர்கள் கண்டிப்பாக உள்ளார்ந்து பாராட்டியிருப்பார்கள்.
இது சக பழைய மாணவர் சங்கங்களுக்கும் ஒரு முன்னுதாரணமான செயற்பாடு.
இரண்டு,
இனிமேல் ஆஸியில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகள் ஊர் கடந்து, மாநிலம் கடந்து தம் கலாசாரப் பரிவர்த்தனைக்கு இம்மாதிரியான நாடக விழாக்களை நிகழ்த்திக் காட்டலாம். இதன் மூலம் ஏட்டுச் சுரக்காய் ஆக இல்லாது தமிழை ஒரு இயங்கு நிலை மொழியாகத் தொடர்ந்து வைத்திருக்கவும், இளைய சமுதாயத்தின் கலை வெளிப்பாட்டுக்கு ஒரு நம்பிக்கையான எதிர்காலத்துக்கும் வழி சமைக்கும்.
கானா பிரபா
09.03.2025
ஒளிப்படங்கள் நன்றி : மெல்பர்ன் சிலப்பதிகார அரங்காடல்